13 பேரை பலிகொண்ட தூத்துக்குடி கலவர சம்பவங்கள் மத்திய அரசுக்கு தமிழக அரசு விளக்கம்

13 பேரை பலி கொண்ட தூத்துக்குடி கலவர சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்து மத்திய உள்துறை இலாகாவுக்கு தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

Update: 2018-05-25 22:15 GMT
சென்னை, 

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக கூடுதலாக அறிக்கை ஒன்றை கேட்டு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை இலாகா நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதியது.

அந்த கடிதத்தில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஸ்டெர்லைட் ஆலை பற்றிய முழு விவரங்கள் என்ன? என்பன போன்ற விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இந்த 2 அறிக்கைகளுக்கும் உரிய பதிலை தமிழக அரசு நேற்று தயார் செய்து, மத்திய உள்துறை இலாகாவிடம் விரிவாக தாக்கல் செய்து உள்ளது.

அதில், ஸ்டெர்லைட் ஆலை எப்போது தொடங்கப்பட்டது? எத்தனை கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது? அதில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? ஆலைக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? ஆலையை அமைக்கும் முன் உள்ளூரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா? அப்போது பொதுமக்கள் ஆட்சேபணை எதுவும் தெரிவித்தார்களா? மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பன போன்ற விவரங்களை தமிழக அரசு விளக்கமாக தெரிவித்து இருக்கிறது. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பை தற்போது துண்டித்து மாசு கட்டுப்பாட்டுவாரியம் நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதையும் கூறி உள்ளது.

மேலும், 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் குறித்தும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்தும், துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமாக தெரிவித்து உள்ளது.

போராட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததையும், ஆனால் வெளியில் இருந்து வந்த சமூக விரோத சக்திகள் போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவி வன்முறையை ஏற்படுத்தியதாகவும், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அடுத்து தடியடி நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதாகவும், அப்போதும் வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்து உள்ளது.

மேலும் செய்திகள்