முதல்-அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராடுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2018-05-24 23:00 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது, காவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பறித்ததற்கு, தார்மீக பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகுங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்துக் கேட்டு விட்டுத்தான் பேரவைத்தலைவர் கூட்டிய அலுவல் ஆய்வுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்.

முதல்-அமைச்சர் அறை முன்பு அமர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று மறியல் செய்தேன். ஆனால், அங்கு என்னை நேரில் சந்தித்து விளக்கம் சொல்லாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் ஏதோ அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென்று வெளியேறிவிட்டு, இப்படியொரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அபாண்டமாக கூறியிருக்கிறார்.

முதல்-அமைச்சரிடம் நேருக்கு நேர், ‘நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’, என்று கூறி விட்டுதான் வெளிநடப்புச் செய்தேன் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்று 3 தினங்கள் கழித்து, நான் இன்றைக்கு அவர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் செய்தபிறகே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, சமூக விரோதிகள் என்று நா கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார் முதல்-அமைச்சர்.

சொந்த நாட்டு மக்களைப் பார்த்து ‘சமூகவிரோதிகள்’ என்று கூறும் முதல்-அமைச்சருக்கு வேண்டுமானால் இப்படி அபத்தமான குற்றச்சாட்டை சுமத்துவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால், மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

100 நாட்களுக்கு மேல் மக்கள் போராடி வருகிறார்கள். 14 முறை அரசு அதிகாரிகள் பேசியதாக கூறுகிறார். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோ, முதல்-அமைச்சரோ ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை எத்தனைமுறை அழைத்துப் பேசினார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பங்களைக் கூட நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏன் முதல்-அமைச்சர் போகவில்லை? ஸ்டெர்லைட் ஆலைக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

‘அமைதியாக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது’, என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, தாக்க வந்தால் தடுக்கத்தானே செய்வார்கள் என்று ஈவு இரக்கமின்றி பதில் சொல்லும் முதல்-அமைச்சர் அந்தப் பதவியில் இருக்க லாயக்கற்றவர் என்பதால் தான் உடனே பதவி விலகுங்கள் என்று தி.மு.க. மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகமே கேட்கிறது.

144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் போது, எப்படி ஸ்டாலின் போனார்?, என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் முதல்-அமைச்சர். அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை காணவில்லை என்று தூத்துக்குடி மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை மருத்துவமனையில் சென்று சந்திக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறுவது, அவருக்கு இதயத்தில் ஈரமில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக முதல்-அமைச்சர் பதவியில் உட்கார்ந்து, தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும், என்பது வேடிக்கையானது. நான் குறிப்பிட விரும்புவது, 13 உயிர்களை பறித்துவிட்டு, பலரது மண்டையை உடைத்துவிட்டு, இன்று வரை காவல்துறையை நள்ளிரவில் வீடுகளுக்குள் அனுப்பி பெண்களை அச்சுறுத்தியும், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைக் கூட அடித்து, உதைத்து கைது செய்யவும் உத்தரவிட்டு விட்டு, சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுவற்கு எந்தத் தகுதியும் முதல்-அமைச்சருக்கு இல்லை, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, ‘நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும், பதவியை விட்டு விலகுங்கள்’, என்று மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகி சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. நீக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் மற்றொரு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெள்ளை அறிக்கை

தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே குரலில் காவல்துறையின் அட்டூழியத்தை அராஜகத்தை, சீருடையில்லாமல் சாதாரண உடையில் காவல்துறையினரை வாகனத்தின் மேல் நிறுத்தி குறி வைத்துச்சுட்டு வீழ்த்திய பயங்கரக் கொடுமைகளைக் கதறி அழுது கொட்டித்தீர்த்தது இன்னும் என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்-அமைச்சரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யா? அல்லது தலைமைச் செயலாளரா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

ஏதுமறியாத மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து, அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றினார்கள் என்பதற்கு தி.மு.க. ஆட்சி தமிழக மக்களின் பேராதரவோடு அமைந்தவுடன் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்பு கிறேன்.

ஈழத்தில் கொடுங்கோலன் ராஜபக்சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா? என்பது பற்றி அ.தி.மு.க. அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்