தமிழகத்தில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் பஸ், ரெயில்கள் ஓடும்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ், ரெயில்கள் ஓடும்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூத்துக்குடி மக்களின் கண்டன உணர்வை பதிவுசெய்யும் வகையிலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலைநிறுத்தத்தை வெற்றி அடையச் செய்யுமாறு பொதுமக்களையும், வணிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘அனைத்துக்கட்சி சார்பில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தில் அனைத்துப்பகுதி மக்களும், ஜனநாயக சக்திகளும், வணிகர்களும் கலந்துகொண்டு முழுஒத்துழைப்பு நல்கி வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், ‘முழுஅடைப்பு போராட்டத்தில் வணிக பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘தமிழக மக்களின் உரிமைகளை பலிகொடுக்கும், அவர்களது உயிர்களுக்கு உலைவைக்கும் அ.தி.மு.க. அரசின் அராஜகப்போக்கை கண்டித்து நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி முழுமையாக கலந்துகொள்ளும்’ என்று கூறியுள்ளார்.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடும் என்று தெரியவந்துள்ளது. நேற்று இரவில் இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எவ்வித இடையூறுமின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.