கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன் சிலையை மாற்றி மோசடி 44 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை

கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன் சிலையை மாற்றி மோசடி 44 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை

Update: 2018-05-23 22:00 GMT
தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன் சிலையை மாற்றி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து 44 ஆண்டுகளுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

1974-ம் ஆண்டு கொல்கத்தா விமான நிலையத்தில் ஐம்பொன்னால் ஆன 4 நடராஜர் சிலைகள் பிடிபட்டன. இந்த சிலைகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உள்ளது என்பது தெரியவந்தது. அதில் ஒன்று தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்த சிலை ஆகும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பிடிபட்ட ஒரு நடராஜர் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற சிலைகள் எங்கு இருக்கிறது என தெரியவில்லை.

இதற்கிடையில் கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலைகள் குறித்து உதவி ஆணையர் பரணிதரன், கோவில் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சரிபார்த்துள்ளனர். அப்போது ஒரு நடராஜர் சிலையின் அமைப்பு மாறி இருந்தது. விசாரித்தபோது அந்த சிலை தான் தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது. 1974-ம் ஆண்டுக்கு முன்பு அதாவது 44 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சிலையை மாற்றி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவில் ஆய்வாளர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் நேற்று கோவிலுக்கு சென்று சிலைகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறுகையில், “கைலாசநாதர் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை 44 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி உள்ளனர். இதுகுறித்து துணை போலீசார் விசாரித்து பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும். அந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் உரிய விசாரணை செய்து சிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்