முன்ஜாமீன் பெற்றும் கைது: கணவன், மனைவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்

போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-22 21:47 GMT
சென்னை,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர், சென்னை அடுத்துள்ள திருவாலங்காடு, வேணுகோபாலபுரம் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் நிலத்தை ரூ.3¼ லட்சத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஜெ.ராஜேந்திரன் என்பவரின் தம்பி பெருமாளிடம் இருந்து வாங்கினார்.

பின்பு இந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, 140 பேருக்கு விற்பனை செய்துவிட்டார். ஆனால், இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்று ஜெயசங்கர் மீது திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஜெயசங்கரின் மனைவி சசிகலாவையும் குற்றவாளியாக சேர்த்தனர். இருவரும் முன் ஜாமீன் பெற்ற நிலையில், ஜெயசங்கரை 2012-ம் ஆண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில், ‘நான் வாங்கி, விற்பனை செய்த நிலத்தின் சர்வே எண் 140 ஆகும். ஆனால், சர்வே எண் 40 தான் வனத்துறைக்கு சொந்தமானது என்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், துணை போலீஸ் சூப்பிரண்டு பி.பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் ஆகியோர் எங்கள் மீது வேண்டும் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது, மிரட்டியது மனித உரிமை மீறிய செயலாகும். எனவே, அவர்களை தண்டிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல, ஜெயசங்கரின் மனைவி சசிகலா கொடுத்த புகாரில், ‘இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. நான் தொழில் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்கிறேன். என் கணவரை மிரட்டி பணத்தை பறிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், என்னையும் குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் டி.ஜெயசந்திரன், அரசுக்கு பரிந்துரை செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.  மனுதாரர்கள் ஜெயசங்கர், சசிகலா ஆகியோருக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை மனித உரிமை மீறிய செயல் என்பது நிரூபணமாகி உள்ளது.

ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது என்று நன்கு தெரிந்து இருந்தும், ஜெயசங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட ஜெயசங்கருக்கு ரூ.5 லட்சமும், சசிகலாவுக்கு ரூ.2 லட்சமும் ஒரு மாதத்துக்குள் இழப்பீடாக தமிழக அரசு வழங்கவேண்டும்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வத்திடம் இருந்து ரூ.2 லட்சமும், இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமாரிடம் இருந்து ரூ.5 லட்சமும் தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். இந்த 2 அதிகாரிகள் மீது துறை ரீதியாவும், குற்ற வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்