பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் கூறியதாவது.

Update: 2018-05-18 23:15 GMT
சென்னை,

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மட்டும் அல்ல மற்ற மாணவர்களும் தமிழ்ப்பாடப்புத்தகம் 2, 3, 4, 5, 7, 8 வகுப்பு வரை பாடநூல் கழக ஆன்லைனில் (www.textbookcorp.tn.nic.in) கடந்த 15-ந்தேதி முதல் விற்கப்பட்டு வருகிறது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு அதற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. அவை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் 23-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். தேவைப்படும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய பாடப்புத்தகங்கள் 1, 6, 9, 11 வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் டி.பி.ஐ.வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு விழா நூலகத்திலும் மற்றும் தனியார் கடைகளிலும் விற்கப்பட உள்ளன.

இந்த விற்பனை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில கடைகளில் பாடப்புத்தகங்களின் விலையை விட கூடுதல் விலைக்கு பாடப்புத்தகம் விற்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட பாடப்புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் அச்சடித்த விலை ரூ.110 என்று உள்ளது. ஆனால் முதல் பக்கத்தில் ரூ.150 என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு பாடப்புத்தகங்களை விற்றால் கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அச்சடித்த புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற உள்ளன. இந்த நூலகம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உள்ள 10 மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு ஜெகன்நாதன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்