கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்தார்.

Update: 2018-05-18 22:15 GMT
ஆலந்தூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது. கர்நாடகாவில் தற்போது நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை. இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தபோதும் காங்கிரசை அழைக்காமல் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

குறிப்பாக மேகாலயாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கால அவகாசம் தரப்பட்டது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்றால், இந்த நடைமுறையை கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?.

இதில் மத்திய அரசு மற்றும் பிரதமரின் தலையீடு உள்ளது. கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவைகள் என்பதை இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றி இருப்பது ஏன்? எதனால்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அவ்வப்போது நிலைபாடுகளை மாற்றி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். நேரிலும் கடிதம் வழங்கப்பட்டது. இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால் அந்த கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்து உள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க வாய்ப்பு அமையவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

அமைச்சர் ஜெயக்குமார் கச்சத்தீவை மீட்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. பெரிய சாதனை. ஜெயக்குமார் வரலாற்றில் சிறப்பு இடத்தை பிடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்