பி.இ. ஆன்லைன் விண்ணப்பம் - கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
பி.இ ஆன்லைன் விண்ணப்பம்- கலந்தாய்வு முறைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை
ஆன்லைன் மூலமாக மட்டுமே பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும், நேரடி கலந்தாய்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் முறை மூலமாக மட்டும் கலந்தாய்வு நடைபெறும் பட்சத்தில் அது கிராமப்புற மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மனுதாரா்கள் தரப்பில் தொிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளும் எந்தவித குற்றச்சாட்டும் எழவில்லை.
ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுவதால், நேரம் மிச்சமாகிறது. இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்கலைக்கழகம் சாா்பில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய வெளிப்படைத் தன்மை இருப்பதால் இதற்கு தடை விதிக்கக் கூடாது என்று தொிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்வதாக தொிவித்த நீதிபதிகள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது. மேலும் டிடி முறையில் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்பதை பல்கலைக்கழகம் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.