வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு- ஜெயக்குமார்

வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #CauveryIssue #DraftScheme #Jayakumar

Update: 2018-05-14 04:58 GMT
சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று வருவதால் திட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. கடந்த 3-ம் தேதி நடந்த விசாரணையின்போது, மே 14- ம் தேதி, காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தினால், இன்று நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு, காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில்   தாக்கல் செய்யும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் நிருபர்களுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில்  வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் நம்பிக்கை உள்ளது.  வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.  கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அங்கு ராவணன் ஆண்டால் என்ன ராமன் ஆண்டால் என்ன என்றும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். எஸ்.வி.சேகர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்