விசைத்தறி கூலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விசைத்தறி உற்பத்தியாளர்களும், ஒப்பந்த முறையில் துணிகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்களும் பாதிக்கப்பட்டனர். #GKVasan

Update: 2018-05-13 18:28 GMT
சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விசைத்தறி உற்பத்தியாளர்களும், ஒப்பந்த முறையில் துணிகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்களும் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் விசைத்தறி மற்றும் அதன் சார்ந்த பிற தொழில் செய்பவர்கள் ஏற்கனவே தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் முடியும் தருவாயில் கூலி உயர்வு கேட்டு, நியாயமான கோரிக்கையை முன் வைத்து கடந்த 30.04.2018 அன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். ஆனால் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.

ஒரு நெசவு தொழிலாளி ஒரு நாள் 9 மணி நேரம் வேலை செய்தால் ரூபாய் 180 ரூபாய் கூலி பெறும் அவல நிலையில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய விலைவாசியில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு மிகவும் அவசியமானது. எனவே தமிழக அரசு விசைத்தறி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முக்கிய கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்