எனது குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது ப.சிதம்பரம் கருத்து

எனது குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2018-05-12 23:15 GMT
சென்னை, 

வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகளை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இங்கிலாந்தில், 5.37 கோடி ரூபாய் மற்றும் 80 லட்ச ரூபாய் மதிப்புடைய இரண்டு சொத்துகளும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும் வாங்கியதை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வருமான வரிக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாகக் கூறி, நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மற்றும் செஸ் குளோபல் என்ற நிறுவனம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருப்பு பணம் (வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி சுமத்தும் சட்டத்தின் 50-ம் பிரிவின் கீழ் சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இந்த புகார் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செஸ் குளோபல் நிறுவனத்தில் இயக்குனர்களில் ஒருவராக கார்த்தி சிதம்பரம் இருக்கிறார். இந்த முதலீடுகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காட்டாதது, கருப்பு பணச்சட்டத்தை மீறுவதாகும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது குடும்பத்தினர் மீது கருப்பு பணச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அவர்களின் வருமான வரிக்கணக்கில் அவை உரிய முறையில் காட்டப்பட்டுவிட்டன.

கணக்கு தணிக்கையாளர்களின் ஆலோசனைப்படி வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கேள்வியில் உள்ள முதலீடுகள் அனைத்துமே வங்கிகள் மூலமாகவே அனுப்பப்பட்டன. வருமான வரித்துறைச் சட்டத்தின் 139-ம் பிரிவின் கீழ், அந்த முதலீடுகள் பற்றிய கணக்குகள் அனைத்துமே அதே ஆண்டில் காட்டப்பட்டுவிட்டன.

முதலீடுகளை வேண்டுமென்றே காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இந்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும், அவர்கள் தாக்கல் செய்துள்ள வருமான வரிக்கணக்குகளே பதிலாக உள்ளன.

எனது குடும்பத்தினர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சரியான முடிவை வருமான வரித்துறை எடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இந்த வழக்கு ஜூன் 11-ந்தேதி சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போதுள்ள சட்டப்படி, இதுபோன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 120 சதவீத வரியும், அபராதமும் விதிக்கப்படும். அதோடு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்