ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார். #EdappadiPalanisamy
சேலம்,
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வேளாண்மை தொழில் சிறக்கவும், விவசாய நலனை காக்கவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.
மேட்டூர் அணையில் மிக குறைவான அளவு தண்ணீர் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம். தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு மழை பெய்தால் அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.
காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் இறுதி தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இந்த சமயத்தில் கர்நாடக முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. காவிரி பிரச்சினையில் நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
சேலம்-சென்னை இடையே புதிதாக அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரும். தமிழகத்தில் பலர் தொழிற்சாலைகள் தொடங்க தயாராக இருக்கிறார்கள். புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.
வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கும். இதன்மூலம் தொழில் வளம் பெருகும். மத்திய அரசின் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். தமிழகத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது அரசின் கடமை. இதனால் மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.