திவாகரனுக்கு சசிகலா ‘திடீர்’ தடை குடும்ப சண்டையில் அதிரடி திருப்பம்
பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று சகோதரர் திவாகரனுக்கு சசிகலா திடீரென்று தடை விதித்து உள்ளார். #Sasikala #Diwakaran
சென்னை,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் கோலோச்ச சசிகலா குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, சசிகலா குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் - திவாகரன் இடையே குடும்ப சண்டை விஸ்வரூபம் எடுத்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறி வசைபாடி வருகின்றனர்.
இந்தநிலையில், குடும்ப சண்டையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. சிறையில் உள்ள சசிகலா தனது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் பெயரில் திவாகரனுக்கு கடந்த 9-ந் தேதி நோட்டீஸ் ஒன்று அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தாங்கள் (திவாகரன்) என் கட்சிக்காரரின் (சசிகலா) உடன்பிறந்த இளைய சகோதரர் ஆவீர்.
தற்போதைய மக்கள் விரோத அரசாக செயலாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கு சாதகமாக, அவர்களை புகழ்ந்தும், அவர்களது துரோக செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த 24-4-2018 அன்று முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருவதால், இந்த சட்ட அறிவிப்பில் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக என் கட்சிக்காரர் தெரிவிக்கின்றார்.
அ.தி.மு.க.வில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளராய், என் கட்சிக்காரர் பல வழக்குகளை நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறார்.
அவை அனைத்தும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குகளின் அனைத்து விவரங்களும் வழக்காடும் தன்மையும் என் கட்சிக்காரரின் ஆலோசனையின்படியே நடந்து வருகின்றன. அதேபோல என் கட்சிக்காரரால், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராய் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் என் கட்சிக்காரரிடம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளை பெற்று செவ்வனே கட்சிப் பணிகளில் செயல்பட்டு வருகின்றார்.
நிலவரங்கள் இவ்வாறு இருக்க, உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்ச்சியுடன் இல்லாததையும், பொல்லாததையும் பொது வெளியில் பேசி வருவது என் கட்சிக்காரருக்கு பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தாங்கள், என் கட்சிக்காரர் பற்றி அவதூறாக பேசி வருவது சட்டத்தின் பார்வையில் சரியானது அல்ல.
எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், அடிப்படை ஆதாரமுமின்றி என் கட்சிக் காரர் பற்றி தாங்கள் முன்வைக்கும் விமர்சன கருத்துகள் மிகவும் கண்டனத்துக்குரியது என்று என் கட்சிக்காரர் தெரிவிக்கின்றார்.
அதுவும் குறிப்பாக என் கட்சிக்காரர் பற்றி ‘இருட்டறையில் இருக்கின்றனர்’, ‘எதுவுமே அவருக்கு தெரியாது’, ‘அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை’, ‘இனிவரும் காலங் கள் அவர் பொதுச்செயலாளராய் செயல்படமாட்டார்-எல்லாம் முடிந்துவிட்டது’, ‘கட்சியில் தற்போது நடப்பது எதுவுமே அவருக்கு தெரியாது’, ‘டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளில் சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை’, ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெயர் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எதுவுமே அவருக்கு தெரியாது’ என தாங்கள் பேட்டிகளின் வாயிலாக பலவாறு விமர்சிப்பது, தங்களின் வயதுக்கும், குடும்ப பின்னணிக்கும் தகுதியல்ல.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட மற்றும் ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வின் கட்சி விதிகளை சட்டத்துக்கு புறம்பாக நீக்கியதையும் 1½ கோடி தொண்டர்களை முன்னிலைப் படுத்தும் அடிப்படை உயர் விதியான பொதுச்செயலாளர் பதவியை தூக்கியெறிந்த துரோகிகளுடன் தற்போது நீங்கள் கை கோர்த்துள்ளதை காலமும் தமிழகமும் ஒரு போதும் மன்னிக்காது என்றும் என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார்.
மேலும் எனது கட்சிக்காரரின் உறவினரான டி.டி.வி.தினகரன் குறித்து தாங்கள் பொது வெளியில் உண்மைக்கு மாறாக பேசி வரும் விஷயங்கள், தங்களின் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்குதல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள், என் கட்சிக்காரரின் தலைமை மாண்புக்கும், ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்க தாங்கள் உள்நோக்கத்துடன் யாரையோ திருப்திபடுத்த முயன்று வருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன என என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் 15-2-2017 அன்று என் கட்சிக்காரர் எடுத்த சத்தியங்களின்படி அ.தி.மு.க.வின் புகழையும், மக்கள் பணியையும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்னபடி, ‘அடுத்த நூறாண்டுகளுக்கு அ.தி.மு.க.வை கொண்டு செல்லும் தூய பணியில்’ அவர் இன்றளவும் செயல்பட்டு வருகிறார்.
இறுதியாக என் கட்சிக்காரர் தங்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், தாங்கள் எந்தவொரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது தங்களின் சொந்த விருப்பம் மற்றும் அடிப்படை உரிமை சார்ந்த விஷயம் என்றும் ஆனால் என் கட்சிக்காரரின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது.
ஆகவே, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தாங்கள் இனிமேல் எவ்வகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யக்கூடாது, பேசக்கூடாது என்பதனையும் இந்த சட்ட அறிவிப்பின் வாயிலாக என் கட்சிக்காரர் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார்.
மேலும், “எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி” எனும் உரிமையை கோரி தாங்கள் எனது கட்சிக்காரரை பற்றி ஊடகங்களில் பேசிவருவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என தெரிவிக்கிறார்.
இதன் பிறகும், தாங்கள் தொடர்ந்து பொய்யான விஷயங்களை பேசும் சூழலில் ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் மீது உரிய சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு என் கட்சிக்காரர் தள்ளப்படுவார் என்பதனையும் இந்த சட்ட அறிவிப்பு வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.