எங்களது போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் பேட்டி
எங்களுடைய (கட்சிகள்) அடுத்தகட்ட போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக அளவில் முழு அடைப்பு போராட்டத்தையும், காவிரி மீட்பு பேரணியும் நடத்தியது.
மேலும் 4 முறை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களும் முன் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எத்தகைய போராட்டத்தை முன் எடுப்பது என்பது குறித்து திட்டமிட 5-வது முறையாக அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடந்த இந்த கூட்டத்தில் 9 கட்சிகள் பங்கேற்றன.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வு மன உளைச்சலின் காரணமாக திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, சிங்கம்புணரியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன், பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனிவாசன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ்நாட்டு மாணவ- மாணவிகளை அவமானப்படுத்தி தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, தனது பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களிடம் சி.பி.எஸ்.இ. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட் தேவையில்லை’ என்ற தீர்மானத்திற்கு காலங்கடத்தாமல் உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலை பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதற்கான அழுத்தத்தை அ.தி.மு.க. அரசு கொடுக்கவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
* புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது மற்றும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எல்லாம் பெண்கள் என்று கூட பாராமல் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் கைது செய்த அராஜகத்திற்கும் அனைத்துக் கட்சி தலைவர்களின் இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பின் நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
* காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங்காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் கர்நாடக தேர்தல் கணக்கை மனதில் கொண்டு, பலமுறை காலஅவகாசம் கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. உச்சநீதிமன்றமும் மே 14-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதற்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகுந்த வருத்தத்தை பதிவு செய்கிறது.
மே 14-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற 15-ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, “காவிரி பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்தி கொண்டு இருக்கின்றன. 14-ந் தேதி காவிரி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. நல்ல முடிவு அதில் வரவில்லை என்றால், 15-ந் தேதி கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டம் நடத்தாலாமா? என்று யோசிப்போம்” என்றார்.
இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பிரதமரை சந்திக்க வலியுறுத்தி 75 நாட்கள் ஆகின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- முதல்-அமைச்சர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு சென்றதா? என்பது குறித்து இன்னும் அரசு தெரிவிக்கவில்லை. எங்களுடைய கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பிரதமரை சந்திக்க தீர்மானம் நிறைவேற்றினோம். அதையும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தோம். அதை பெற்றுக்கொண்டோம் என்பதற்கான ஒப்புதல் கடிதம் கூட இன்னும் எங்களுக்கு வரவில்லை. இது வேதனைக்குரிய ஒன்று.
கேள்வி:- 14-ந் தேதி நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா? அடுத்தகட்ட போராட்டம் எந்த அளவுக்கு இருக்கும்?
பதில்:- நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்த்து போராட்டம் குறித்து முடிவு எடுப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் எங்களது அடுத்தகட்ட போராட்டம் இருக்கும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.