மின்சாரம் தாக்கி அண்ணன் சாவு போலீசாரிடம் விளக்கி காட்டிய தம்பியும் பலியான பரிதாபம்
மின்சாரம் தாக்கி கொத்தனார் உயிர் இழந்தார். அவர் இறந்தது குறித்து போலீசாரிடம் விளக்கி கூறியபோது மின்சாரம் பாய்ந்து அவரது தம்பியும் பலியானார்.
கீழ்வேளூர்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 37). இவரது தம்பி ராஜூ(30). அண்ணன், தம்பி இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். கொத்தனார் வேலை கிடைக்காத நேரத்தில், வேறு கூலி வேலை செய்வார்கள். கணேசனுக்கு திருமணமாகி சத்யா(32) என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜூவுக்கு கீழ்வேளூரை அடுத்த பாலக்குறிச்சியை சேர்ந்த விஜயாவை பெண் பார்த்து கணேசன் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின்னரே ராஜூ தனது அண்ணனை விட்டு பிரிந்து பாலக்குறிச்சியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். விஜயா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணம் ஆன பிறகும் அண்ணன், தம்பி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தனர்.
மின்சாரம் தாக்கி சாவு
இந்தநிலையில் ராஜூ, பாலக்குறிச்சியில் இருந்து தனது அண்ணனை பார்ப்பதற்காக கீழ்வேளூருக்கு சென்றார். நேற்று காலை கணேசன் தனது வீட்டில் இருந்த ‘சுவிட்ச் போர்டை’ சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
தம்பியும் பலி
இதுபற்றி தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ராஜூ, போலீசாரிடம் தனது அண்ணன், இந்த சுவிட்ச் போர்டை சரிசெய்தபோதுதான் மின்சாரம் தாக்கி இறந்தார் என போலீசார் முன்பு விளக்கி கூறினார்.
அப்போது அந்த ‘சுவிட்ச் போர்டில்’ எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டது. இதனால் ராஜூவையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, சம்பவ இடத்திலேயே பலியானார்.
வாழ்விலும் இணைபிரியாமல் இருந்து வந்த சகோதரர்கள் சாவிலும் ஒன்றாகவே இணைந்தனர். இருவருடைய உடல்களுக்கும் உறவினர்கள், கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.