சென்னை தலைமைச்செயலகம் பகுதியில் போலீசார் குவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். #JactoGeo
சென்னை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.இருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான கு.தியாகராஜன் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைசெயலகம், மற்றும் சேப்பாக்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச்செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும், தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.