பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் மனநல நிபுணர்களை நியமிக்கவில்லை என்றால், ஜூன் 5-ந் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் மீது, மாணவிகளை திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த உயர் அதிகாரிகள், அந்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு இல்லை என்றும், வேறு பள்ளிக்கு இடமாற்றியும் உத்தரவிட்டு, நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மன அழுத்தம்
ஆசிரியர் மாணவர் உறவு என்பது சிறப்பான முறையில் இருக்க வேண்டும். ஆனால் பழைய காலத்தில் இருந்த நடைமுறை இப்போது இல்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்து விடுவதால் துயர சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதுபோல, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் கருதி மனநல நிபுணர்களை நியமித்து கவுன்சிலிங் வழங்க வேண்டும்.
ஆஜராக வேண்டும்
இதுதொடர்பாக ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை என்றால், ஜூன் 5-ந் தேதி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.