அம்பேத்கர் சிலை அவமதிப்பு: விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

மரக்காணம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-25 21:15 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் சிறுவாடி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சமூக விரோதிகள் செருப்பு மாலை அணிவித்தனர். நேற்று காலை இதுபற்றி அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்து அம்பேத்கர் சிலையில் இருந்த செருப்பு மாலையை அகற்றிவிட்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சிறுவாடி, முருக்கேரி, பிரம்மதேசம், கந்தாடு, மரக்காணம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

7 பிரிவுகளில் வழக்கு

இந்த நிலையில் சிறுவாடியில் அங்கு அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர், சிலையை அவமதித்தவர்களை கைது செய்யும் வரை கலைந்து செல்லமாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மரக்காணம் அம்பேத்கர் சிலை அருகேயும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு

அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திண்டிவனத்தில் நேற்று காலை சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற அரசு பஸ், நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு விரைவு பஸ், சென்னையில் இருந்து திட்டக்குடி, அரியலூர், மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற 3 அரசு பஸ்கள் உள்பட மொத்தம் 6 பஸ்களின் கண்ணாடிகளை சிலர் அடித்து உடைத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டதால் அப்பகுதியில் ஒருமணி நேரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 

மேலும் செய்திகள்