சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியதால் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
சேலம்,
சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியதால் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் மாம்பழம் தான். சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கும். அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது, சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு, நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் வ.உ.சி.மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். மாம்பழ சீசன் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வமாக மாம்பழங் களை அதிகளவில் வீடுகளுக்கு வாங்கி செல்வதை காணமுடிகிறது.
இதுகுறித்து சேலம் மாங்காய் மற்றும் பழ வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபால் கூறியதாவது:-
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில் மாங்காய் விளைச்சல் இருக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கியதால் சேலம் மார்க்கெட்டுக்கு முன்பை காட்டிலும் தற்போது அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. சேலம் மாம்பழம் என்றாலே தனி சுவை இருக்கும். இதனால் சேலத்தில் வசிக்கும் நபர்கள், வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பல வகையான மாம்பழங்களை மொத்தமாக வாங்கி அனுப்பி தங்களது அன்பை நினைவூட்டுவார்கள். மாம்பழத்தின் ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.
தற்போது ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மொத்தமாக மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வரும் நாட்களில் மாம்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் பெங்களூரா, இமாம் பசந்த் உள்ளிட்ட மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.130 வரைக்கும், பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும், மல்கோவா மாம்பழம் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.130 வரைக்கும், கிளிமூக்கு, செந்தூரா வகை மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிகரித்தால் அதன் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.