காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லறை மீது அமர்ந்து அய்யாக்கண்ணு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லறை மீது அமர்ந்து அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தினார்.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அனைத்திந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சீனி சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ‘காவிரியை மீட்போம், விவசாயத்தை காப்போம்’ என்பன உள்ளிட்ட கோஷமிட்டனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆங்கிலேயர் காலத்து கல்லறையின் மீது திடீரென அய்யாக்கண்ணு அமர்ந்து போராட்டம் நடத்தினார். அப்போது அவருடன் கழக நிர்வாகிகளும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கரிகால சோழன் காலத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது தண்ணீர் தர கர்நாடக அரசு மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்காக வாரியத்தை அமைக்காமல் தள்ளி போடுகிறது.
மீத்தேன், கெயில், ஸ்டெர்லைட் போன்றவை மூலம் வருவாய் கிடைக்கும் என நினைக்கும் மத்திய அரசு, தமிழகம் பாலைவனமாவது குறித்து கவலைப்படவில்லை. உற்பத்தி பொருட்களில் விலையை 2 மடங்காக உயர்த்தப்படும், வெளிநாட்டில் இருந்து மரபணு விதை மற்றும் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் தற்போது அதை கண்டுகொள்வதில்லை.
மரபணு விதையால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. காவிரி பிரச்சினையை நீர்த்து போக விடமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதிக்கு பிறகு சென்னையில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த கல்லறையில் உள்ள ஆவிகள் பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை உருவாக்கி கொடுத்து, விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.