கணக்கை பராமரிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை அறநிலையத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நகைகள், சொத்துகள் குறித்த கணக்குகளை பராமரிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவில் நகைகள், சொத்துகள் குறித்த கணக்குகளை பராமரிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரம் கரிய மாணிக்கப்பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலரின் மகன் நரசிம்ம பட்டாச்சாரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சந்தான பட்டாச்சாரி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். அதன் பிறகு கோவிலை நிர்வகித்தவர்களால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதையடுத்து, இந்து சமய இணை ஆணையரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டது.
அதன்படி விசாரணை நடத்திய இணை ஆணையர், பாடி திருவல்லீஸ்வரர் கோவில் செயல் அதிகாரியை எங்களது கோவிலுக்கும் அதிகாரியாக நியமித்தார். இதையடுத்து இந்த கோவிலில் ஆய்வு நடத்திய அந்த அதிகாரி தனது அறிக்கையை அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார்.
அதில், கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலை நிர்வாகம் செய்தவர்கள் கோவிலுக்கு சொந்தமான 132 இடங்களை வாடகைக்கு விட்டுள்ளனர். ஆனால் 30 சொத்துகளுக்கு மட்டுமே நியாயமான வாடகை நிர்ணயித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தங்களது இஷ்டம்போல வாடகையை குறைத்து முறைகேடு செய்துள்ளனர். வாடகை பாக்கியையும் சரியாக வசூல் செய்யவில்லை.
கோவில் சொத்துகள், ஐம்பொன் நகைகள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பான கணக்குகளை பதிவேடுகளில் முறையாக பராமரிக்கவில்லை. கிலோ கணக்கில் தங்க நகைகள் மாயமாகி இருப்பதாகவும் தெரிகிறது.
கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை. பழமையான இந்த கோவிலில் 15 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இங்குள்ள உற்சவர் சிலை 100 ஆண்டுகள் பழமையானது. அந்த சிலையை தொல்பொருள் துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக நகைகள் மற்றும் சொத்து கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமாகி உள்ளன. எனவே உயர் அதிகாரிகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அறநிலையத்துறை இணை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இணை ஆணையர் சி.லட்சுமணன் ஆஜராகி, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. கோவில் நிர்வாகத்தை மேற்கொண்ட செயல் அதிகாரியோ அல்லது உயர் அதிகாரிகளோ அறநிலையத்துறை விதிகளை முறையாக கடைபிடிக்கவில்லை. தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘இந்த வழக்கில் தவறு யார் செய்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். இந்த கோவிலின் நகைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே கோவில் நகைகள் மற்றும் சொத்துகள் தொடர்பான முறையான கணக்குகளை பராமரிக்காத உயர் அதிகாரிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 4 வாரத்திற்குள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன்பின்னர் அதுகுறித்து வருகிற ஜூன் 5-ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.