துணைவேந்தர் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனாதிபதி ஆட்சியா? என சந்தேகம்; மு.க. ஸ்டாலின்

துணைவேந்தர் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனாதிபதி ஆட்சியா? என்ற சந்தேகத்தினை எழுப்புகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin

Update: 2018-04-17 15:54 GMT
சென்னை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபாலிடம் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கல்லூரி நிர்வாகமும், மாதர் சங்கமும் கொடுத்துள்ளது. புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தனபால் கூறினார்.

பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்தது.

தொடர்ந்து, இதுபற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானம் விசாரணை மேற்கொள்வார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டு உள்ளார்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவருக்கு ஏப்ரல் 28ந்தேதி வரை 12 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவரின் ஆட்சி நடைபெறுகிறதோ என்று எல்லோர் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.  துணைவேந்தர் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனாதிபதி ஆட்சியா? என்ற சந்தேகத்தினை எழுப்புகிறது.  பேராசிரியையின் உரையாடல் பெற்றோர் அனைவரையும் குலை நடுங்க வைத்துள்ளது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, துணைவேந்தர் அதிகாரத்திற்குள் வலிந்து பிரவேசித்து ஆளுநர் விசாரணை அதிகாரியை நியமித்துள்ளார்.  துணைவேந்தர் அதிகாரத்தினை வேந்தர் கையில் எடுத்து கொண்டு எப்படி அதிகாரியை நியமிக்கலாம்? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ஆளுநரின் அதிகார தலையீடு பற்றி ஜனாதிபதியிடம் முதல் அமைச்சர் புகார் அளிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்