விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அலுவலகம் மீது நேற்று பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றது.

Update: 2018-04-16 22:00 GMT
அம்பத்தூர்,

அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அலுவலகம் மீது நேற்று பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றது. வெடிகுண்டு வீசியவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னை அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே காமராசர்புரம் டோமி காலனி ஜெ.ஜெ தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் என்ற கதிர்நிலவன்(வயது47) என்பவரது அலுவலகம் உள்ளது.

பட்டாபிராம் பகுதியை சேர்ந்த இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு கட்சி அலுவலகத்தை நடத்தி வருகிறார். அலுவலக உதவியாளராக இந்த பகுதியை சேர்ந்த அழகு என்பவர் வேலை பார்த்து வருகிறார். மாலை நேரத்தில் எப்போதும் கதிர்நிலவன் தனது அலுவலகத்தில் இருப்பது வழக்கம்.

நேற்று நடந்த வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கதிர்நிலவன் கலந்துகொண்டார். இதனால் அலுவலகத்தில் உதவியாளர் அழகு மட்டும் இருந்தார். நேற்று மாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அலுவலகத்தில் புகுந்து சிறிய பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி, அதில் துணியால் திரி போன்று செய்து தீ வைத்துவிட்டு அலுவலகத்தின் மீது வீசினர்.

ஆனால் அது அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. பெட்ரோல் நிரப்பிய பாட்டில் அங்கு இருந்த அம்பேத்கர், மற்றும் திருமாவளவன் படத்தின் மீது விழுந்து பெட்ரோல் சிதறியது. இதைக்கண்ட உதவியாளர் அழகு அங்கு விரைந்து வந்ததைத்தொடர்ந்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் கதிர் நிலவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு குவிந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வக்கீல் கதிர்நிலவன் அம்பத்தூர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில் ‘தன்னை கொலை செய்யும் நோக்கத்துடனே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. ஏற்கனவே சிலர் எனது அலுவலகத்தை நோட்டமிட்டு சென்று உள்ளனர். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்’ எனவும் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்