ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் ‘டீல்’ பேச முயன்றது; நான் மறுத்துவிட்டேன் -பொன்.ராதாகிருஷ்ணன்
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் ‘டீல்’ பேச முயன்றது நான் அதை மறுத்து விட்டேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Bansterlite #Sterlite #PonRadhakrishnan
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டமும் நடந்து விடாதபடி சதி செயல்கள் நடந்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இதுபோல கன்னியாகுமரியிலும் வளர்ச்சி பணிகள் நடக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குருஸ் பர்னாந்து சிலை அருகே பி.ஜே.பி. சார்பாக 4 நாள் உண்ணாவிரதம் இருந்து முதலில் போராடியவன் நான். அப்போது எனக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறி விட்டனர்.
ஆனால் இப்போது பாதிப்பு என்றதும் அதே மக்கள் போராடுகின்றனர். அந்த ஆலை செயல்படுவது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது அ.தி.மு.க., தி.மு.க.
நான் உண்ணாவிரதம் இருந்த போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் பேரம் பேசியது. அதற்கு நான் உடன்படவில்லை. பின்னர் 1998 பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் செலவுக்கு பணம் அளிக்க முன்வந்தனர். அதனையும் நான் நிராகரித்து திருப்பி அனுப்பினேன். இதுபோல கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் தொடக்கத்தில் நான் போராடினேன். ஆனால் பல கோடி பணம் செலவழித்துவிட்ட பின்னர் நிறுத்த முடியாது. திட்டம் வேண்டும் என்று அப்போது கூறி விட்டனர்.
எனவே எந்த திட்டத்தையும் மக்கள் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.