காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் தீக்குளிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
திருப்போரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
தீக்குளிப்பு
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சி 6-வது வார்டு தி.மு.க. கிளை துணை செயலாளர் ரமேஷ் (வயது 47). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டின் அருகே திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில் உடல் கருகிய அவரை வண்டலூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
தி.மு.க. பிரமுகர் தீக்குளித்த தகவல் அறிந்த மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட தி.மு.க.வினர் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ரமேஷை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரமேசுக்கு ஜெகதா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.