சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்
சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்க்கப்பல்களை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்று வரும், இந்திய ராணுவ பாதுகாப்பு கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக 2 போர்க்கப்பல்கள் 13-ந் தேதி(நேற்று) மற்றும் 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து இருந்தது.
இந்த போர்க்கப்பல்களை பார்வையிட விரும்பும் பொதுமக்கள், சென்னை தீவுத்திடலில் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை ஒன்றின் நகல் மற்றும் ஒரிஜினலுடன் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அங்கிருந்து பஸ்கள் மூலம் சென்னை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்து இருந்தது. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும், கேமரா, உணவு பொருட்கள், கைப்பைகளும் கொண்டு வர அனுமதியில்லை என்றும் தெரிவித்து இருந்தனர். எனினும், பொதுமக்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
போர்க்கப்பல்களை பார்வையிட வரும் பொதுமக்கள் பதிவு செய்வதற்காக, சென்னை தீவுத்திடலில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் 6 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 5 அரங்குகளில் பொதுமக்கள் அமர வசதி செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு அரங்கிலும் தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போர்க்கப்பலை பார்க்க முன்பதிவு செய்வதற்காக நேற்று அதிகாலை 6 மணி முதலே தீவுத்திடலில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். பின்னர் அவர்கள் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு அரங்குகளில் அமர வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பஸ்களில் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பள்ளிகளில் இருந்து மொத்தமாக சீருடையில் அழைத்து வரும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
அங்கு சென்ற பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பொதுமக்கள் பார்வைக்கு 2 போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத் ஆகிய 4 போர்க் கப்பல்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை கண்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
போர்க்கப்பல்களை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தங்கள் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். கப்பலுக்குள் நுழையும் பொதுமக்கள் செல்போன்களை சுவிட்ச்-ஆப் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
கப்பலுக்குள் செல்போன்களில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டாலும், கப்பலில் உள்ள ‘ஹெலிப்பேடு’ தளத்தில் நின்று செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அங்கும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் மற்றும் கப்பற்படை வீரர்களுடன் நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் கப்பலில் ஏறி உள்ளே செல்லும் போது, கப்பற்படை வீரர்கள் அவர்களை ‘சல்யூட்’ அடித்து இன்முகத்துடன் வரவேற்றனர். மேலும் கப்பல்களில் பொதுமக்களுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. போர்க்கப்பல்களில், கப்பற்படை வீரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து புகைப்பட விளக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், ‘ராக்கெட் லாஞ்சர்கள்’ எவ்வாறு செயல்படுகிறது என்பதை கப்பற்படை வீரர்கள் பொதுமக்களுக்கு விளக்கினார்கள்.
பொதுமக்கள் 4 போர்க்கப்பல்களையும் பார்த்து முடித்த பின்னர், சென்னை துறைமுகத்தில் இருந்து பஸ்கள் மூலம் தீவுத்திடலில் கொண்டு விடப்பட்டனர். போர்க்கப்பல்களை பார்த்த அனுபவம் குறித்து, அம்பத்தூரை சேர்ந்த எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் காட்வின் கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் 2 போர்க்கப்பல்களைத் தான் எதிர்பார்த்து வந்தோம். ஆனால், 4 போர்க்கப்பல்கள் நின்றது எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. நாளை, திருவிடந்தையில் நடைபெற இருக்கும் ராணுவ கண்காட்சியையும் பார்வையிட செல்கிறோம்” என்று தெரிவித்தார்.
போர்க்கப்பலை பார்க்க ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் 3.30 மணியளவிலேயே 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பார்க்க வந்தனர். பார்வையாளர்கள் அதிகமாக வந்ததால் இன்றும்(சனிக்கிழமையும்) சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.