மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-04-12 23:15 GMT
சென்னை,

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அலுவலர் குழு பரிந்துரை பேரில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படியை திருத்தி கடந்த 11.10.17 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போது வழங்கப்படும் 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக 1.1.18 தேதியில் இருந்து உயர்த்தி 15.3.18 அன்று மத்திய நிதித்துறை உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பணியாளர்களுக்கு 1.1.18 அன்றில் இருந்து மாதம் ஒன்றுக்கு 7 சதவீதமாக உயர்த்தி உத்தரவிடுகிறது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, மின்னணு பரிமாற்ற முறையில் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வை, ஏற்கனவே அகவிலைப்படி உயர்வை பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் பெறுவார்கள். பகுதி நேர ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், யு.ஜி.சி.யால் நிர்வகிக்கப்படும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு போல தமிழக அரசும் தனது பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி 1.1.18 முதல் முன்தேதியிட்டு ரொக்கமாக வழங்கியதற்காக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்