அறவழியிலேயே போராடும்படி தொண்டர்களிடம் கூறியுள்ளேன்; வேல்முருகன்; தமிமுன் அன்சாரி கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அறவழியிலேயே போராடும்படி தொண்டர்களிடம் கூறியுள்ளேன் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். #CauveryManagementBoard
சென்னை,
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
தனது தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.
நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்ததால், இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்பது பரவலான கருத்து.
இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆளுங்கட்சி சார்பில் 3ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தொடர்ந்து அனைத்து கட்சிகளின் சார்பில் 5ந்தேதி முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. இதற்கு வணிக அமைப்புகளும் ஆதரவு வழங்கின. விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டோர் கருப்பு கொடி காட்ட முடிவு செய்துள்ளன.
இதேபோன்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்து உள்ளன.
இந்த நிலையில், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையத்தில் உள்ள பேனர் மீது ஏறி போராட்டம் நடத்துகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அறவழியிலேயே போராடுங்கள். ஆபத்து நிறைந்த முறையில் போராட வேண்டாம் என தனது தொண்டர்களிடம் கூறியுள்ளேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.