பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அறிவிப்பு

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் தெரிவித்தனர்.

Update: 2018-04-11 22:45 GMT
சென்னை,

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா, பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குனர்கள் அமீர், கவுதமன், வெற்றிமாறன் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டி நடைபெற்ற மைதானத்தை முற்றுகையிடும் அறவழி போராட்டத்தில் வினை இருந்ததால் எதிர்வினை இருந்தது. மற்றபடி போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (இன்று) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானம் தரையிறங்கும் சென்னை விமானநிலையம் முன்பு தார்மீக அடிப்படையில் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம். இதற்கு அவர் பதில் சொல்லி ஆகவேண்டும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருந்தால், பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருப்போம்.

வன்முறையாக தெரியவில்லையா?

நேற்று (நேற்று முன்தினம்) நடந்த அறவழி போராட்டத்தில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. ஆனால் அது வன்முறை இல்லை. அந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்து இருக்கிறார். காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த லாரி டிரைவர்கள், கிளனர்கள் இன்னும் பலர் கன்னடர்களால் தாக்கப்பட்டார்கள். அப்போது இவர் குரல் கொடுத்தாரா?. அது அவருக்கு வன்முறையாக தெரியவில்லையா?

கூடைக்குள் பூ இருப்பதாக பார்த்தால், பூ நாகமாக தெரிகிறது. இப்போது அறிக்கைவிட்ட நடிகர் ரஜினிகாந்த் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் அறிவித்த போது இதை ஆதரிக்கிறேன் என்று ஒரு அறிக்கை விட்டு இருக்கலாமே? அவர் வெறும் வாய் மட்டும் தான் அசைக்கிறார். ‘டப்பிங்’ யாரோ பேசுகிறார்கள்.

ஆந்திராவில் சீருடை அணிந்த போலீஸ்காரர்களால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக போலீஸ்காரர்களால் வாகனங்கள், குடிசைகள் எரிக்கப்பட்டபோதும் வன்முறையாக தெரியவில்லையா? அப்போது ஏன் கண்டிக்கவில்லை? வியர்வையோடு, தாகத்தோடு நின்று குரல் கொடுத்து நாங்கள் போராடினோம்.

இமயமலைக்கு போய்விட்டு வாருங்கள்

கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த ரசிகர்கள் தாக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அப்படி தாக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்து இருந்தால், ஒரு ஆள் கூட மைதானத்துக்குள் சென்று இருக்க முடியாது. தாக்க வேண்டும் என்பதா எங்கள் நோக்கம். திரையுலகினர் நடத்திய போராட்டத்துக்கு வாழ்த்துகள் என்று சொன்ன ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்டு அந்த வீடியோவும் வெளியிடப்பட்டது. இது வன்முறை இல்லையா?

போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் ரஜினிகாந்துக்கு ஏன் வந்தது? அவர் கருத்து சொல்ல வேண்டியது, அதற்கு தமிழிசை சவுந்தர ராஜன் வாழ்த்து சொல்கிறார். உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊமையாக இருந்தவர்கள் கருத்து சொல்லக் கூடாது. நாங்கள் களத்தில் நின்று போராடுகிறோம்.

காவிரி பிரச்சினை பற்றி எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. பொழுது போகவில்லை என்றால் இமயமலைக்கு போய்விட்டு வாருங்கள். கருத்து சொல்ல வேண்டும் என்றால் களத்தில் வந்து சொல்லவேண்டும்.

அதிகாரத்துக்கு ஆதரவு

ரஜினிகாந்த் முழு அரசியல்வாதி என்று அவர் சொல்லி நடக்கட்டும். அந்த நடையில் எங்கு ஊனம் என்று நாங்கள் சொல்கிறோம். அவர் டுவிட்டரில் பாமர மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதரவாக பேசாமல், அதிகாரத்துக்கு ஆதரவாக பேசுகிறார். அவரை யாரோ பேச வைக்கிறார்கள்.

வருகிற 20-ந் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டி நிச்சயம் நடக்காது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இனத்துரோகம் செய்கிறார்கள். போலீசார் சீமான் மீது வழக்கு போட்டு அவரை கைது செய்வார்களானால், எங்கள் அனைவரையும் சேர்த்து தான் கைது செய்ய வேண்டிய நிலை வரும். அவர் மீது போடப்பட்டு இருக்கும் வழக்கை திரும்ப பெறவேண்டும்.

எங்களுடைய போராட்டம் எதிர்கால சந்ததியினருக்கான போராட்டம். நம்முடைய அனைத்து ஆதாரங்களையும் அழிக்க நினைக்கிறார்கள். தமிழர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும். நீர் ஆதாரம் அழிந்தால் மொழி, இனம் இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்