ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் போலீசார் மீது தாக்குதல் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு
ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் மீது நடந்த தாக்குதல் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. #CauveryIssue #IPLProtest
சென்னை
சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். போராட்டம் தொடர்பாக இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து எனவும் அவர் கூறியிருந்தார்.
போராட்டக்காரர்கள் மீது குற்றம் சாட்டும் வகையில் ரஜினி இவ்வாறு பேசியிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த தாக்குதல் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஆனால் சமூக வலைதளங்களில் ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டு கொன்ற போது வராத கோபம்... புயலில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றாத அரசுகளின் மேல் வராத கோபம்... காவல்துறை எட்டி உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்தபோது வராத கோபம்... ஏன் இப்போது மட்டும் வந்தது என நடிகர் ரஜினிகாந்தை பலரும் சாடி வருகின்றனர்.
இது பற்றி இயக்குனர் அமீர் கூறுகையில், ரஜினியின் இந்த கருத்து அரசியல் புரியாமையை காட்டுகிறது என தெரிவித்தார். ‘ஒரே ஒரு வீடியோவை பார்த்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். உண்மையில் நடந்தது என்ன? போராட்டம் எப்படி தொடங்கப்பட்டது? யார் முதலில் கம்பை சுழற்றியது என்பதை தெரியாமல் அவர் பார்த்த காட்சியை வைத்து உடனே பதிவிட்டுவிட்டார். இது வருத்தத்திற்கு உரியது’ என்றார் அமீர்.
போராட்டக்காரர்கள் செய்தது தவறு என்றும் போலீசார் செய்தது சரி என்றும் ரஜினி கூறியிருப்பதன் மூலம் மேலும், அவர் கர்நாடகத்தை ஆதரிப்பதாக தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
இது போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். காவிரி விவகாரம் குறித்து கருத்து சொல்ல ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை.