கிரிக்கெட் போட்டியை எதிர்ப்பவர்கள் சினிமாவை திரையிடக்கூடாது என்று கூறுவார்களா?
கிரிக்கெட் போட்டியை எதிர்ப்பவர்கள் சினிமாவை திரையிடக்கூடாது என்று கூறுவார்களா? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். #Pon.Radhakrishnan
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் தொற்றா நோய்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான பிரசார வாகனத்தை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வாகனத்தை அவரே சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.
பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன். அதில் என்ன விஷயங்கள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் எந்த காலத்திலும் தமிழகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
கர்நாடகம் தண்ணீர் தராமல் தந்திரமான நிலைகளில் இருந்து வருகிறது. அந்த நிலை இனியும் தொடராத வண்ணம் வரைவு திட்டம் அமைக்க வேண்டும். கால அவகாசம் ஆனாலும் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நிரந்தமான தீர்வை கொடுக்கும். காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறந்த தி.மு.க. பிரதமருக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க.வின் தலைமையை எதிர்த்து தான் கருப்பு கொடி காட்டப்பட வேண்டும். ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டாம் என்று கூறுபவர்கள் சினிமாவை திரையிடக்கூடாது, சினிமா எடுக்கக்கூடாது என்றும் கூறுவார்களா?
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக முடியும் என்ற நினைப்பில் வேல்முருகன் செயல்பட்டு வருகிறார். இது ஏற்புடையது அல்ல. தமிழக மக்கள் எந்த நிலையிலும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அப்படிதான் செயல்படுவேன் என்று வேல்முருகன் போன்றவர்கள் கூறினால், அதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.