13-ந் தேதி கவர்னருடன் சந்திப்பு மு.க.ஸ்டாலின் தகவல்
13-ந் தேதி கவர்னரை சந்திக்க இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.
திருவாரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். 2-வது நாளாக தஞ்சை மாவட்டத்தில் பயணத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்.
நான்காவது நாளாக நேற்று காலை 8.40 மணிக்கு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் நடை பயணத்தை தொடங்கினார்.
அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, நடிகர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிர மணியன், மதிவாணன், ஜெயராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி விஜயன் ஆகியோர் உடன் சென்றனர்.
திருவாரூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி வழியாக பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, அம்மையப்பன், குளிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் தனது காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டார். வழி் நெடுகிலும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நின்று வரவேற்பு அளித்தனர். பல கிராமங்களில் சாலைகளில் கோலமிட்டு, மேளதாளம் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
குளிக்கரையில் இருந்து மாட்டு வண்டியில் அமர்ந்து வண்டியை ஓட்டியபடி தேவர்கண்டநல்லூர் வந்தடைந்தார்.
பின்னர் தேவர்கண்ட நல்லூர் பெத்தார்ணசாமி கோவில் வளாகத்தில் நடந்த விவசாயிகள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல் அரிய லூரில் இருந்து மற்றொரு பயணமும் தொடங்கியுள்ளது. இந்த இரு பயணக்குழுவும் வருகிற 12-ந் தேதி கடலூரில் சங்கமிக்கின்றோம். அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதனை தொடர்ந்து 13-ந் தேதி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சென்னை செல்கிறோம். சென்னை ராஜ் பவனில் கவர்னரை நேரில் சந்திக்க உள்ளோம். இதற்காக காலை 12.30 மணிக்கு கவர்னர் நேரம் தந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
அப்போது காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கான காரணம் குறித்து எடுத்து சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திட உள்ளோம்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் மே மாதம் 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் உரிய பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.