வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது: முதல்வர் பழனிசாமி
வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #Sterlite
சென்னை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஏறக்குறைய 60 நாட்களாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி ஆன நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க அந்நிறுவனம் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- “ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நிபந்தனைகளை, ஸ்டெர்லிட் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் 9.4.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது” என்றார்.