‘கிரிக்கெட் வீரர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல’ வேல்முருகன் பேட்டி

கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-09 23:45 GMT
சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக தமிழக மண்ணில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒருபோதும் இந்த போட்டியை தமிழகத்தில் நடத்தக்கூடாது. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகையிட உள்ளோம். இதனை உலக தமிழர் பேரமைப்பை சேர்ந்த பழ.நெடுமாறன் தொடங்கிவைக்கிறார்.

போலீஸ், ராணுவத்தின் உதவியோடு ஒரு நாள் வேண்டுமானால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம். ஆனால் தொடர்ந்து அதுபோன்று நடத்த முடியாது. சென்னையில் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மைதானத்துக்கு வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. தமிழக மக்களின் உணர்வை தமிழ் தெரிந்த கிரிக்கெட் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்ப்பையும் மீறி நடத்தினால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எங்களுடைய எதிர்ப்பை காட்டுவோம். மேலும் ரசிகர்கள்போல மைதானத்தின் உள்ளே சென்று எங்களுடைய தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள். பா.ம.க. நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கிறோம். அழைப்பு விடுக்கப்பட்டால், எங்கள் கட்சி தொண்டர்களும் அதில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்க விட்டு ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்