மாணவர்களை திரட்டி கவர்னர் மாளிகை நோக்கி செல்வோம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
துணைவேந்தர் பதவிகளில் மதவாதிகளை நியமிக்கக்கூடாது என்றும், மாணவர்களை திரட்டி கவர்னர் மாளிகை நோக்கி செல்வோம் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது பதவியை ரத்து செய்யக்கோரியும் பா.ம.க. மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், பா.ம.க. மாநில மாணவரணி செயலாளர் செஞ்சி செ.ரவி, துணைத்தலைவர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு அநீதிகளை இழைத்து வருகிறது. இப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும். இது ஒரு அடையாளப் போராட்டம் தான். அடுத்தக்கட்டமாக மாணவர்களை திரட்டி கவர்னர் மாளிகை நோக்கி செல்வோம். இதற்கு மாணவர்கள் கூட்டம் தயாராக இருக்க வேண்டும்.
துணைவேந்தர் நியமனத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வினியோகிக்க வேண்டும். தமிழகத்தை ஆள்வது எடப்பாடி பழனிசாமியா? இல்லை கவர்னரா? என்றே தெரியவில்லை. பல விஷயங்களில் கவர்னர் தான் முடிவு எடுக்கிறார். துணைவேந்தர்களை நியமிப்பது எங்கள் வேலை இல்லை என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா?. கவர்னருக்கு தெரிவித்து விட்டா துணைவேந்தர்களை ஜெயலலிதா நியமனம் செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவேந்தர்கள் தங்களுடைய வேந்தர் கவர்னரை பார்த்தா நன்றி தெரிவித்தார்கள். போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவிடம் தான் வாழ்த்து பெற்றார்கள். ஜெயலலிதா தான் துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்தார். இந்த ஆட்சியாளர்களுக்கு அந்த தெம்பு இல்லை.
ஊழலை விட மிக மோசம் மதவெறி. இப்போது கல்வி நிலையங்களில் மதவாதிகளை புகுத்தி, தமிழ்நாட்டை காவி மயமாக்கும் முயற்சி நடக்கிறது. துணைவேந்தர் பதவிகளில் மதவாதிகளை நியமிக்கக்கூடாது. இதை முறியடிக்க வேண்டும்.
கவர்னர் மாளிகையில் துணைவேந்தர் பதவிக்கு 170 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அவர்களின் பட்டியலை வெளியிட அவர்கள் தயாரா?. இந்த பதவியில் அமர ஒரு தமிழருக்கு கூட தகுதியில்லையா?. கர்நாடகாவில் இது போன்று அவர்களால் செய்ய முடியுமா?. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்தை காவி மயமாக்கி விடுவார்கள். தமிழை கூட படிக்க கூடாது என்று சொல்வார்கள். தமிழ் மாணவர்கள் மருத்துவம் படிக்க கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். கவர்னர் மாளிகை தான் அதிகார மையமாக செயல்படுகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம்.
11-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். ஏற்கனவே நாங்கள் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருந்தோம். தற்போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள் இதை வைத்து கூட்டணி என்று சொல்லக்கூடாது. எந்த காலத்திலும் நாங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேர மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.