காவிரி உரிமையை மீட்க 3 ஆம் நாள் நடைபயணத்தை தஞ்சையில் தொடங்கினார் மு.க. ஸ்டாலின்
காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இருந்து தொடங்கியுள்ளார். இன்று 3 வது நாள் அன்னப்பன்பேட்டையில் இருந்து தொடங்கினார். #CauveryMangementBoard #CauveryIssue #MKStalin
தஞ்சாவூர்,
தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான
மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்த தொடங்கினார்.
நேற்று 2-வது நாள் பயணத்தை தஞ்சை சூரக்கோட்டையில் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சென்றனர்.
தொடர்ந்து பல கிராமங்களுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் சில்லத்தூரில் விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று மாலை பட்டுக்கோட்டை நகரில் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.
இன்று 3 வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கியது.
தஞ்சையை அடுத்த அன்னப்பன் பேட்டையில் இன்று காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அங்கு காவிரி உரிமை மீட்பு கொடியை ஏற்றி வைத்தார். பிறகு சிறிது தூரம் அவர் நடந்து சென்றார். தொடர்ந்து கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்ய வேனில் ஏறி புறப்பட்டு சென்றார். ஒவ்வொரு கிராமமாக மு.க.ஸ்டாலின் செல்லும் போது வழிநெடுகிலும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
இன்றைய 3-வது நாள் பயணத்தில் மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மா.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
தொடர்ந்து மெலட்டூர், ஒன்பத்து வேலி, திருக்கருக்காவூர், இடை இருப்பு, இரும்புத்தலை, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அருந்த வபுரம், புத்தூர் ஆகிய இடங்களுக்கு செல்கிறார். மாலையில் அம்மாபேட்டை, செம்பியநல்லூர், அவளிவநல்லூர், குமாரமங்கலம், பெருங்குடி , அமராவதி, வெட்டாற்று பாலம், ஆலங்குடி, நார்த் தாங்குடி ஆகிய கிராமங்களுக்கு செல்கிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 3-வது நாள் பயணத்தை மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.