ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது

கியாஸ் ஏஜென்சி உரிமத்துக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். பணம் கொடுத்தவரும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கினார்.

Update: 2018-04-07 23:15 GMT
சென்னை,

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் இயங்கிவருகிறது. கியாஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு அனுமதி வழங்குதல், சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் போன்ற பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அலுவலகத்தின் தலைமை இணை கட்டுப்பாடு அதிகாரியாக ஏ.கே.யாதவ் உள்ளார். இவரிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ‘ஏ.ஆர்.அண்ட் கோ’ நிறுவனத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் ஏஜென்சி தொடங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்குவதற்கு ஏ.கே.யாதவ் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றார்.

இதுகுறித்து சென்னை சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு தடுப்பு அதிகாரிகளுக்கு தகல் கிடைத்தது. அதன்பேரில் தென்மண்டல அலுவலகத்தில் அதிகாரி ஏ.கே.யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சக்திவேலிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரையும், லஞ்சம் கொடுத்த சக்திவேலையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னையை சேர்ந்த குமரேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் தமிழக தலைமை கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், மற்றொரு அதிகாரி லஞ்ச புகாரில் சிக்கியிருப்பது அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.கே.யாதவ் ஏற்கனவே வழங்கிய அனுமதிகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ஏ.கே.யாதவ் பணியாற்றிய சென்னை அலுவலகம் மற்றும் அவர் ஏற்கனவே பணியாற்றிய ஜெய்ப்பூர், சண்டிகார் உள்பட 11 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்