ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியால் துவண்ட தொண்டர்கள்: அ.தி.மு.க.-தி.மு.க. அலுவலகம் வெறிச்சோடியது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியால் தொண்டர்கள் துவண்டதால் அதிமுக, திமுக அலுவலகங்கள் வெறிச்சோடியது.
சென்னை,
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். அவருடைய வெற்றி உறுதியாகிவிட்டது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்றதையடுத்து அடையாறில் உள்ள அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம், தேனாம் பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமும் அதிக ஆள் நடமாட்ட மின்றி காணப்பட்டது. ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றியை அந்த கட்சியினர் யாருமே எதிர் பார்க்கவில்லை. தோல்வியால் அக்கட்சி தொண்டர்கள் துவண்டு போனார்கள். இதனால் கட்சி அலுவலகம் அருகில் யாரும் தலைகாட்டவில்லை. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.