ஜம்மு காஷ்மீரில் உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், கொசூர் கிராமத்தைச் சேர்ந்த நாச்சி என்பவரின் மகன் ராணுவ வீரர் என்.மூர்த்தி பனிச்சரிவில் சிக்கி கடந்த 19–ந் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்த ராணுவ வீரர் என்.மூர்த்தியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் என்.மூர்த்தியின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.