ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்ததாக கூறிய வீடியோ நேற்று வெளியானது.

Update: 2017-12-20 21:15 GMT
சென்னை,

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்ததாக கூறிய வீடியோ நேற்று வெளியானது. இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்ததாக கூறி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னையில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வெளியானது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்:-

இந்த வீடியோ வெற்றிவேலுக்கு எப்படி கிடைத்தது. அதை யார் கொடுத்தது என்பதை அவர் சொல்ல வேண்டும். அவர்கள் சட்டத்தை மதிக்கிறவர்களாக இருந்தால், ஜெயலலிதாவை மதிக்கிறவர்கள் என்றால் அந்த ஆதாரத்தை விசாரணை ஆணைய தலைவரிடம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லவா.

ஓராண்டுக்கு பிறகு இன்றைக்கு தான் அவருக்கு மனசாட்சி உறுத்தியதா?. தேர்தல் வரும்போது தான் உறுத்துமா?.

டி.டி.வி. தினகரனிடம் இருந்து தானே இந்த வீடியோவை வெற்றிவேல் வாங்கினார். அதற்கு என்ன நோக்கம்?. எல்லாம் ஆர்.கே.நகர் தேர்தல் தான். இந்த வீடியோவை விசாரணை ஆணையத்திடம் கொடுத்தால், சோதனைக்கு உட்படுத்தப்படும், அவ்வாறு உட்படுத்தப்பட்டால் உண்மை தன்மை வெளிவரும். அந்த பயத்தின் காரணமாகவே அவர்கள் விசாரணை ஆணையத்திடம் கொடுக்கவில்லை.

தமிழிசை சவுந்தரராஜன்

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

இந்த வீடியோ எப்போது, எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்ற கேள்வி இப்போது எழுகிறது. இவ்வளவு நாள் வெளியிடாமல் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஏன் வெளியிடுகிறார்கள்? அவருடைய இறப்பை நிம்மதியாக இல்லாமல், அதை அரசியலாக்கி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக இதை வெளியிட்டு இருக்கிறார்கள்.

திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்:-

ஒரு ஆண்டுவரை இந்த வீடியோவை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பதில் தரும் விதமாக முன்னரே இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கலாமே? இன்னும் வீடியோ இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதை 10 ஆண்டுகள் கழித்தா வெளியிடுவார்கள். தேர்தல் லாபத்துக்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம். இதனால் மனம் மாறி மக்கள் வாக்களித்துவிட மாட்டார்கள். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது பெரிய கேள்வியை எழுப்புகிறது.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

3 மாதத்துக்கு முன்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீதிபதி ஆறுமுகசாமி, யாரிடமாவது ஜெயலலிதா தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் தருமாறு கேட்டார். ஆனால் அப்போது தராமல் இப்போது வெளியிட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த ஜெயலலிதாவை யார் வீடியோ எடுத்தது? அவர்கள் மீதும், ஆதாரங்களை மறைத்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்.ராஜா

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா:-

தேர்தல் விதிமுறைகளை மீறி இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். பா.ஜ.க. தேசிய தலைவர்கள் வந்தபோது கூட ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதற்கு நான் சாட்சி. இவ்வாறு உடல்நலம் நன்றாக இருக்கிறார்கள் என்றால் ஏன் பார்க்க அனுமதிக்கவில்லை? சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையை தீர விசாரிக்க வேண்டும்

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

விசாரணை ஆணையத்தில் இந்த வீடியோவை கொடுத்து இருக்க வேண்டும். தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதை வெளியிட்டு இருப்பது உள்நோக்கம் உடையது. அரசியல் ஆதாயத்துக்காக இதை வெளியிடப்பட்டதாக நான் கருதுகிறேன். இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் இந்த வீடியோ ஏற்படுத்திவிடாது.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

இந்த வீடியோ அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டதா? போயஸ் தோட்டத்தில் எடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வீடியோ தேர்தலுக்காக தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்:-

இந்த வீடியோ நம்பகத்தன்மையாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். சசிகலா மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட புகார்களில் உண்மை இல்லை என்ற வெளிப்படைத்தன்மை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி:-

இந்த வீடியோ மூலம் பல்வேறு பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் இந்த வீடியோ வெளியானதை நான் வரவேற்கிறேன்.

செம்மலை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை:-

இவர்கள் அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இவர்களால் இன்றைக்கு அரசியல் அசிங்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன? இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்