குட்கா ஊழல் விசாரணையை தாமதப்படுத்த போலீசார் முயற்சி டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
குட்கா ஊழல் விசாரணையை தாமதப்படுத்த முயற்சி நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை அதிரவைத்த குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தமிழக காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதற்காகவும், இந்த வழக்கின் புலன் விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்குடனும் வருமானவரித் துறையிடம் இருந்து சில மின்னணு கருவிகளைக் கேட்டு ஐகோர்ட்டில் காவல்துறை மனு செய்துள்ளது. இந்த கோரிக்கை தேவையற்றது.
குட்கா ஊழல் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி, இந்த வழக்கில் அமைச்சரையும், காவல் உயர் அதிகாரிகளையும் சேர்க்காமல் காப்பாற்றவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது. அதற்காகத் தான் இத்தகையை நாடகங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.
நீதியைக் காக்க..
குட்கா ஊழல் வழக்கில் உண்மைகள் ஏற்கனவே வெளிக்கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆட்சியாளர்களுக்கு இருந்தால், இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு தாராளமாக நிரூபிக்க முடியும்.
எனவே, அமைச்சரைக் காக்க வேண்டும் என்று துடிக்காமல், நீதியைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் குட்கா நிறுவன கையூட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தர கையூட்டுத் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.