சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண சிறப்பு திட்டம்

சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண சிறப்பு திட்டம் தயாரித்து செயல்படுத்தப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2017-12-17 23:15 GMT

சென்னை,

‘ஒகி’ புயல் பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ‘ஒகி’ புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மத்திய அரசின் நிவாரணம் கோரியும், தாக்கல் செய்யப்பட உள்ள கோரிக்கை மனு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், இரா.துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த அனைத்து மீன்பிடி படகுகளை கணக்கிடும் பணி, விவசாய நிலங்களின் சேதங்களை மதிப்பிடும் பணி, சாய்ந்து விழுந்த மரங்களை கணக்கீடு செய்யும் பணி நடந்தது.

துறை செயலாளர்கள் அங்கு முகாமிட்டு, அப்பணிகளை விரைந்து மேற்கொண்டனர். துறை செயலாளர்களின் ஆய்வறிக்கையை, வருவாய் நிர்வாக ஆணையர் தொகுத்து, முதல்–அமைச்சரிடம் வழங்கினார்.

‘ஒகி’ புயலால் துறை வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடிப்படையில், மத்திய அரசுக்கு கோரிக்கை மனுவை தயாரிக்க முதல்–அமைச்சர் அறிவுறுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதி, சேதமடைந்த குடிசைகளுக்கான இழப்பீடு, கால்நடை இழப்புகளுக்கான நிவாரண நிதி ஆகியன உடனுக்குடன் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

பயிர் சேதங்களுக்கு உடனடி நிவாரணம், ரப்பர் பயிரிட தேவையான இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளது. மீனவர்களின் பழுதடைந்த படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீர்செய்யவும், முற்றிலும் சேதமடைந்த படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் புதிதாக வாங்கவும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழுதடைந்த 15 ஆயிரத்து 858 மின்கம்பங்கள், 95 மின் மாற்றிகள் உள்ளிட்ட மின் சாதனங்களை சீரமைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிதியுதவி வழங்க ஏதுவாக, மாநில பேரிடர் நிவாரண வழிகாட்டுதல்களில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, அப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் குளங்கள், கண்மாய்கள், கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்புகளை நிரந்தரமாக சீர்செய்யப்பட உள்ளது. மிகவும் பாதிப்படைந்த அரசு துறை கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

75 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைகள், 99 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றை நிரந்தரமாக சீர்செய்யவும், நகராட்சித்துறையில் சேதம் அடைந்த சாலை சீரமைப்பு பணிகள் உட்பட ஏனைய பணிகளையும், பேரூராட்சி துறையில் சேதமடைந்த சாலைகள், சேதமடைந்த குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை சீரமைப்பது போன்ற பணிகளை நிரந்தரமாக அமைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே முதல்–அமைச்சர் அனுப்பிய கடிதத்தில் ‘ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கோரிக்கையை வலியுறுத்தியும், மாநில பேரிடர் நிதிக்கும் மேலாக தேவைப்படும் கூடுதல் நிதியை, மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தொலைத்தொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளும் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்து, அதற்கான ஒரு சிறப்பு நிதியுதவியை மத்திய அரசிடம் கோரவும் முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டமாக அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர் வழிகளை ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை தயாரித்து செயல்படுத்த ஏற்கனவே பிரதமர் உதவி அளிப்பதாக அளித்த உறுதியின் அடிப்படையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்