தமிழகத்தில் ஓரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் ஓரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரு சில இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் 41 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பான அளவை விட 4 சதவீதம் குறைவாகவே(39 செ.மீ.) மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
பரங்கிப்பேட்டையில் 5 செ.மீ., ஓட்டப்பிடாரம், பாளையங்கோட்டையில் தலா 3 செ.மீ., சாந்தான்குளம், ஸ்ரீமுஷ்ணத்தில் தலா 2 செ.மீ.