கவர்னர் ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் கவர்னர் ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை என்று சென்னையில் மீனவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2017-12-16 22:15 GMT

சென்னை,

ஒகி புயலில் சிக்கி பலியான மீனவர்களை காப்பாற்ற தவறிய தமிழக அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர்.

முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாநில துணை தலைவர் கே.என்.சேகர், சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேச பெருமாள் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மீனவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் எம்.இ.ராஜா, தயாளன், கோ.சு.மணி, நாஞ்சில் ரவி, பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்பதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்கறை காட்டவில்லை. இதனால் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவுக்கும், அவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒகி புயலில் பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். பலியான மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும்.

ஒகி புயல் தாக்கிய கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற தொழில்நுட்பத்தையும் கொடுக்கவேண்டும். நாங்கள் 2 வருடம் ஆட்சியில் இருந்தால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டிருப்போம்.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் நடத்தியது, நடத்துவது நாடகம். இனிமேல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கப்போவது தான் உண்மை. ஆர்.கே.நகர் தேர்தல் என்றாலே எச்சில் உமிழும் அளவுக்கு இருக்கிறது. மீனவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து, தீர்மானங்கள் நிறைவேற்றி, அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒகி புயலால் பாதிப்பு ஏற்பட்டபோதும், இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும்போதும் என தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மட்டும் மத்திய அரசு வேறுபடுத்தி பார்க்கிறது. மற்ற மாநிலங்களில் மீனவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக உதவிக்கரம் நீட்டுகிறது. டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியதினால் ஒகி புயலில் பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஒகி புயலில் சிக்கிய ஒரு மீனவரை கூட காப்பாற்றவில்லை. மீனவர்கள் தாங்களாகவே வெவ்வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளனர். மற்ற மாநிலங்களை சேர்ந்த மீனவர்களுக்கு உதவி செய்யும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் காணவில்லை என்பதால் மெத்தன போக்குடன் இருக்கிறது. ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம், தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழலில் கவர்னர் ஆய்வு நடத்துவதில் எந்தவித தவறும் இல்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்