பெரியபாண்டியின் உடல் மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது

பெரியபாண்டியின் உடல் மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

Update: 2017-12-14 08:39 GMT
சென்னை

கொளத்தூர் நகைக்கடை கொள்ளையர்களை  ராஜஸ்தானுக்கு பிடிக்கச்சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பின் பெரியபாண்டியின் உடல் இன்று சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தின் 5வது கேட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பேன்ட் வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டிய ராஜன், ராஜலட்சுமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து தலைமை செயலாளர் அதிகாரிகள் அஞ்சலி  செலுத்தினர்.

பெரியபாண்டியனின் உடலுக்கு எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி  செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,

ராஜஸ்தான் கொள்ளையரை உடனடியாக கைது செய்து, தமிழகத்திற்கு கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டும்.  தேவைப்பட்டால் ராஜஸ்தான் முதலமைச்சரை தொடர்பு கொண்டு விரைந்து கைது செய்ய வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார்.

அவரது உடலுக்கு மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இன்று மாலை 6 மணி வரை பெரியபாண்டியின் உடல் சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்குப் பிறகு அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மதுரையில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அரசு முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளது.

மேலும் செய்திகள்