சென்னை விமான நிலையத்தில் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் - துணை முதலமைச்சர் அஞ்சலி
சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் அங்கு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு ஜெய்ப்பூர் கொண்டு வரப்பட்டது. இன்று காலை 8.40 மணிக்கு அவரது உடல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டது. மதியம் 12.20 மணிக்கு அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.
விமான நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம், சேஷசாயி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள். அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர் .
சென்னை விமான நிலையத்தில் 5-வது வாசல் அருகில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 21 துப்பாக்கிகளை கையில் ஏந்தியபடி 21 போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது பூர்வீக வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதன்பிறகு அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா மற்றும் 2 மகன்கள் நேற்றிரவே சாலைப்புதூர் கிராமத்திற்கு சென்று விட்டனர்.
பெரிய பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சாலைப்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.