தமிழக காவல்துறைக்கு ராஜஸ்தான் காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்தது ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா
தமிழக காவல்துறைக்கு ராஜஸ்தான் காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்தது என ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா கூறி உள்ளார்.
சென்னை
கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற தமிழக இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாலி மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் பார்கவ், இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். தப்பி ஓடிவிட்ட கொள்ளைக் கும்பல் ராம்வாஸ் கிராமம் அருகில் உள்ள பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த கிராமங்களை ராஜஸ்தான் போலீசார் முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் பாலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் பார்கவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது சூப்பிரண்டு தீபக் பார்கவ், “பெரிய பாண்டியனை சுட்டுக் கொன்ற கொள்ளையர்களை நிச்சயம் பிடித்து விடுவோம்“ என்று உறுதியளித்தார்.
ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா, தந்தி டி.வி-க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நேற்று கொள்ளையர்கள் தேடுதல் வேட்டையில் எங்கள் போலீஸார் தமிழக தனிப்படைக்கு உதவி செய்தார்கள். எப்போதுமே எங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
தமிழக காவல்துறைக்கு ராஜஸ்தான் காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் . தமிழக காவல்துறையுடன் இணைந்து ராம்புரா பகுதியில் உள்ள கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.