தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்,மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-12-12 23:37 GMT
சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. மீனவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகலில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மாநில மீனவர் அணி செயலாளர் கே.பி.பி.சாமி, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், மாநில வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் வந்தபோது, முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால், சென்னை மட்டும் அல்லாமல் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வார்தா புயல்; இப்போது ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பல இன்னல்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் அந்த மாவட்டத்துக்கு சென்று சுமார் 35 கிராமங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, தேவைப்படும் சில உதவிகளையும், பொருட்களையும் தி.மு.க. சார்பில் வழங்கி இருக்கிறோம்.

தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் அத்தனை பேரும், சில அமைப்புகளும் சென்று இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக நாம் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும், கவர்னரை சந்திக்க உள்ளோம் என்றும் கூறிய பின்னர் முதல்-அமைச்சர் கன்னியாகுமரிக்கு சென்று உள்ளார். எனவே தமிழக முதல்-அமைச்சரை இயக்கி கொண்டு இருப்பதே நாம்(தி.மு.க.) தான்.

பக்கத்தில் இருக்கும் கேரள மாநில முதல்-அமைச்சர் உடனடியாக ஓடோடி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். நிவாரணம் வழங்குகிறார். தங்கள் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள், எத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறார். தேவையான நிதியை அறிவித்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் எழுதிய கடிதத்தில் கூட எத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள்? எத்தனை பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்? எத்தனை பேர் வீடுகளை இழந்து கொண்டு இருக்கிறார்கள்? என்று சொல்கிறார்களா? எந்த கணக்கும் சொல்வது இல்லை. கேரள அரசு செயல்படுவதில் 25 சதவீதமாவது செயல்படுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இனியும் ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்தால், நாளை கவர்னரை சந்திக்கிறோம். அதற்கு மேலும் தேவைப்பட்டால் டெல்லி செல்லும் திட்டத்தையும் வகுத்துக் கொண்டு இருக்கிறோம். அதன் பிறகும், இன்னும் செவிடாக இருந்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மீனவர்களையும் ஒன்று திரட்டி தி.மு.க. ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்தும் என எச்சரிக்கிறேன்.
 இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்