ஸ்டாலின் வேட்டியில் கொட்டிய டீ பதறி துடித்த வைகோ
ஸ்டாலின் கையிலிருந்த டம்ளரிலிருந்து டீயில் ஒருதுளி அவர் வேட்டியில் பட்டுவிட்டது,அதைப் பார்த்த வைகோ பதறி துடித்து சட்டென அதைத் துடைத்தார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும். அதற்கான பணியை இந்த ஆர்.கே. நகரில் மருதுகணேஷ் வெற்றியின்மூலம் தொடங்க வேண்டும்" என்றார்.
இதுவரை ஸ்டாலினும் வைகோவும் எதிரெதிர் துருவங்களாகவே அடையாளம் காணப்பட்டுவந்தனர். கலைஞரை வீட்டில் போய்ப் பார்த்து, அவரின் உடல்நலத்தை விசாரித்தபோதே வைகோவும், ஸ்டாலினும் நெருங்கிவிட்டனர்.
மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களில் அவர்களின் அடுத்த சந்திப்புகள் நடந்தன. அப்போது, இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டனர். நேற்றிரவு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் கையிலிருந்த டம்ளரிலிருந்து டீயில் ஒருதுளி அவர் வேட்டியில் பட்டுவிட்டது. அதைப் பார்த்த வைகோ,பதறி துடித்து சட்டென அதைத் துடைக்கத் தொடங்கிவிட்டார். இந்தக் காட்சியைப் பார்த்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.