தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 14–ந்தேதி கடலூர் வருகை
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 14–ந்தேதி கடலூர் வருகிறார்.
கடலூர்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார். முதன் முதலாக அவர் கோவைக்கு சென்று பஸ் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு, அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டமும் நடத்தினார்.
அப்போது அவர் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லப்போவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேரில் சென்று ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அடுத்ததாக அவர் வருகிற 14–ந்தேதி(வியாழக்கிழமை) கடலூர் மாவட்டத்துக்கு வருகிறார். விருத்தாசலத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்குகிறார்.
அதன் பிறகு கடலூருக்கு வந்து இரவில் தங்குகிறார். மறுநாள்(வெள்ளிக்கிழமை) கடலூரில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் பகல் 2 மணி அளவில் அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என தெரிகிறது.